Wednesday, July 3, 2013

தொலைக்காட்சி (Television,TV )

தொலைக்காட்சி (Television,TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில் தொலைக்காட்சி என்பது தொலைக்காட்சிப் பெட்டியையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொழினுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பரப்புகையையும் சூழமைவுக்கேற்ப குறிக்கலாம். தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது.
1920களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் புழக்கத்தில் வந்தமையால் இன்று வீடுகளிலும் வணிக மற்றும் பிற நிறுவனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சாதாரணமாக உள்ளன. விளம்பரங்கள், மனமகிழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக பெரிதும் வளர்ந்துள்ளது. 1950களிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி ஊடகம் முன்னிலை வகிக்கிறது.[1] ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, 1970கள் முதல் ஒளிதப் பேழைகள், சீரொளி வட்டுக்கள், டிவிடிக்கள், அண்மையில் நீலக்கதிர் வட்டுக்கள் வந்தபிறகு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயனாகின்றன. அண்மைக் காலங்களில் இணையத் தொலைக்காட்சி என இணையம் மூலமாகவும் தொலைக்காட்சி காணக்கூடிய வசதி வந்துள்ளது.
மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) போன்ற மற்ற வகைகள் இருப்பினும் இந்த ஊடகத்தின் முதன்மைப் பயன்பாடு பரப்புகைத் தொலைக்காட்சிக்காகும். 1920களில் உருவான வானொலி ஒலிபரப்பினை ஒட்டி தொலைக்காட்சி ஒளிபரப்பும் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த ஆற்றல் மிக்க வானலைப் பரப்புனர்களால் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறிப்பலைகள் தனிநபர் தொலைக்காட்சிப் பெட்டிகளை எட்டுகின்றன.
தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு பொதுவாக 54–890 மெகா ஏர்ட்சு அலைக்கற்றையில் வரையறுக்கப்பட்ட அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகிறது.[2] தற்காலத்தில் பல நாடுகளிலும் ஒலிக் குறிப்பலைகள் முப்பரிமான ஒலியாகவும் சூழொலியாகவும் பரப்பப்படுகின்றன.2000ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சி சேவைகள் பொதுவாக அலைமருவிய குறிப்பலைகளாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக பல நாடுகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றிலும் எண்ணிம வடிவத்திற்கு மாறி விட்டன.
1980இல் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியின் இயக்கத்தை விளக்கும் ஒளிதம்
ஓர் வழமையான தொலைக்காட்சிப் பெட்டியில் பல மின்னணுவியல் சுற்றட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்; இவற்றில் முதன்மையானவை பரப்பப்பட்ட அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் இசைவித்த வானலை அலைவெண் வாங்கியும் அந்த அலைவரிசையை அதே அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகளைப் பெறும் கலவைக்கருவியும் ஆகும். இத்தகைய இசைவியும் கலவைக்கருவியும் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒளிதக் காட்டிகள் எனப்படுகின்றன. தொலைக்காட்சி குறிப்பலைகள் பல சீர்தரங்களில் அமைந்துள்ளன. மேலும் ஒளிபரப்பு அமைப்புகளும் எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் உயர் வரையறு தொலைக்காட்சி (HDTV) என முன்னேறி வருகின்றன. தொலைக்காட்சி அமைப்புகள் பொதுவாக நேரடி கண்காணிப்பு கடினமானதாகவோ ஆபத்தானதாகவோ உள்ள இடங்களில் கடுங் கண்காப்பு, தொழிற்சாலை செயல்முறைக் கட்டுப்பாடு மற்றும் ஆயுத வழிசெலுத்துமை போன்ற செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
தொலைக்காட்சிகளின் சமூகத் தாக்கமாக சிறுவர்களின் தொலைக்காட்சிக் காணலுக்கும் கவனம்குறைந்த மிகு இயக்க பிறழ்வு (ADHD)க்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[3]

பொருளடக்கம்

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஆபத்து

தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடிஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]

இடங்கள் வாரியாக தொலைக்காட்சி வரலாறு

இந்தியாவில் தொலைக்காட்சி

யுனெஸ்கோ உதவியால் 1959ஆம் ஆண்டு இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. விவசாய மேம்பாட்டுக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் இது இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் டில்லியிலும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் ஒளிபரப்பு நிகழ்ந்தது. அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவாக இருந்த இது பின்னர்ப் பிரிக்கப்பட்டு 'தூர்தர்ஷன்' என்ற தனி அமைப்பாக ஆக்கப்பட்டது.<\ref>http://www.tamilvu.org/courses/degree/p102/p1024/html/p1024661.htm<\ref>

இலங்கையில் தொலைக்காட்சி

இலங்கையில் தொலைக்காட்சி முதன் முதலாக 1979, ஏப்ரல் 13 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் முதலாவது தொலைக்காட்சிச் சேவை சுயாதீன தொலைக்காட்சி (Independent Television Network - ITN) ஆகும். இது ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியாக செயல்பட்டது. இச்சேவையை 1979 சூன் 5 இல் இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது[5]. இலங்கை அரசின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினி 1982, பெப்ரவரி 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது[6]. அதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இறுதிவரை இலங்கையில் ஒன்பது அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக இருபத்திநான்கு அலைவரிசைகள் தோன்றியுள்ளன. அவற்றுள் சில மறைந்துவிட்டன. சில அலைவரிசைகள் தமது சேவையினை தொடர்ந்தும் வழங்கிவருகின்றன.

No comments:

Post a Comment