Monday, July 8, 2013

முடக்கு வாதம் (Rheumatoid arthritis; RA)

முடக்கு வாதம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Rheumatoid Arthritis.JPG
முடக்கு வாதத்தால் தாக்கப்பட்ட கை
ICD-10 M05.-M06.
ICD-9 714
OMIM 180300
DiseasesDB 11506
MedlinePlus 000431
eMedicine article/331715  article/1266195 article/305417 article/401271 article/335186 article/808419
பாடத் தலைப்பு D001172

முடக்கு வாதம் (Rheumatoid arthritis; RA) என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியினை உருவாக்கும் ஒரு உடல்நலச் சீர்கேடாகும். இந்நோய், பல திசுக்களையும் உடல்உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும் முதன்மையாக வளையுந்தன்மையுடைய புற நீர்ம மூட்டுகளையே (synovial joints) அதிகம் தாக்குகிறது. இந்நோய்நிகழ்வு, மூட்டுறை செல்கள் மிகைப்பெருக்கமடைவதால் (hyperplasia) உண்டான மூட்டுப்பை வீக்கம், அதிகப்படியான மூட்டுறை திரவம் (synovial fluid), நாரிழைய வளர்ச்சியினால் மூட்டுச்சவ்வில் உருவான படலம் (pannus) ஆகியவற்றினால் இரண்டாம்பட்சமாக விளையும் மூட்டுகளைச் சுற்றியுள்ள உறையின் மீதான அழற்சித் தாக்குதலை உள்ளடக்கியதாகும். இப்பிணிக்குரிய நோய்நிகழ்முறையினால் பொதுவாக மூட்டுக் கசியிழையம் (articular cartilage) அழிவடைவதும், மூட்டுகளில் எலும்புப் பிணைப்பு (ankylosis) ஏற்படுவதும் நிகழ்கிறது. முடக்குவாத நோய் பரவலான அழற்சியை நுரையீரல்களிலும், இதய உறையிலும் (pericardium), நுரையீரல் உறையிலும் (pleura), விழிவெண்படலத்திலும் (sclera), தோலுக்கடியில் உள்ள திசுக்களில் உருண்டைவடிவச் சிதைவுகளையும் (nodular lesions) ஏற்படுத்துகிறது. முடக்குவாத நோய் தோன்றுவதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், தன்னெதிர்ப்பு காரணிகள் நாள்பட்டநோய் உருவாவதற்கும், நோய் தீவிரமடைவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, முடக்கு வாதம் ஒரு உள்பரவிய தன்னெதிர்ப்பு நோயாகக் கருதப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினர் (1%) முடக்கு வாதத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள், ஆண்களைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாக இந்நோயினால் தாக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் நோயின் தொடக்கம் நாற்பது, ஐம்பது வயதுகளில் என்றாலும், எவ்வயதினரையும் இந்நோய் தாக்கக்கூடும். மேலும், மனித வெள்ளையணு எதிர்ப்பி டி.ஆர்1 (HLA-DR1) அல்லது டி.ஆர்4 (HLA-DR4) குருதி வகைகளைக் கொண்ட மனிதர்கள் இந்நோய் உருவாவதற்கான பெருமளவு இடரினைக் கொண்டுள்ளார்கள். வலி நிறைந்த, செயலிழக்கச் செய்யும் இந்நோயானது சரியான முறையில் சிகிச்சையளிக்காவிட்டால் குறிப்பிடத்தக்க அளவில் செயலிழப்பு, நடமாடும்திறனைக் குறைக்கும் இயல்புடையது. நோயறிகுறிகள், உடல் சோதனை, கதிர்வரைபடம் (எக்ஸ் கதிர்), ஆய்வகப் பரிசோதனைகள் ஆகியவற்றின் துணைக் கொண்டு இந்நோய் கண்டறியப்படுகிறது என்றாலும், ஆய்விற்காக அமெரிக்க வாதவியல் குழுமம் [American College of Rheumatology (ACR)], வாதநோய்க்கெதிரான ஐரோப்பியக் கூட்டமைப்பு [European League Against Rheumatism (EULAR)] ஆகியவை முடக்குவாத நோய் வகைப்பாட்டு விதிகளை வெளியிட்டுள்ளார்கள். முடக்குவாத நோயறிதலும், அதன் நெடுங்கால மேலாண்மையும் மூட்டு, தசை, எலும்பு நோய்களில் நிபுணராக உள்ள முடவியல் மருத்துவர்களால் செயற்படுத்தப்படுகிறது[1].
முடக்குவாதத்திற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்தியல் சாராத சிகிச்சை முறைகளாக உள்ளவை; உடலியக்க மருத்துவச் சிகிச்சை (physiotherapy), ஆர்தொசெஸ் (உடல் ஊனத்தை (முடத்தை) நேர்ப்படுத்தும், தாங்கும், தவிர்க்கும் (அல்லது) சரிசெய்யும் எலும்பு-மூட்டு கருவிகள்), தொழில்வழி சிகிச்சை, ஊட்டச்சத்து மருத்துவம் என்றாலும் இவை மூட்டு அழிவு தீவிரமடைவதை தடுப்பதில்லை. வலியகற்றிகள் (analgesics), அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (ஸ்ட்டீராய்டுகளையும் சேர்த்து) போன்றவை நோயறிகுறிகளைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நோய்நிகழ்முறையின் அடிப்படையான எதிர்ப்புச் செயல்முறைகளைத் தடுத்து, நீண்டகால சேதத்தினை நிறுத்திவைக்க வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் [disease-modifying antirheumatic drugs (DMARDs)] உபயோகப்படுத்தப்படுகின்றன. தற்பொழுது, புதியதாக உபயோகத்திலிருக்கும் உயிரியல்சார் மருந்துகள் (biologics) சிகிச்சைக்கான விருப்பத் தேர்வுகளை அதிகரித்துள்ளன[1]. முடக்குவாத நோயாளிகள் மீன் எண்ணெயை உட்கொள்ளுவது வீங்கிய மூட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும்,[2] சாதகமான அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொடுப்பதாகவும், வாதநோயாளிகளில் உள்ள இடரான உள்ளடங்கிய இதயகுழலிய நோயைத் (occlusive cardiovascular disease) தடுப்பதாகவும் நோய்ச்சோதனைகள் தெரிவிக்கின்றன[3]. பாரீசில் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டு அறுவை மருத்துவர் அகஸ்டின் (1772–1840) என்பவரால் 1800 - ல் முதன்முதலாக முடக்கு வாதம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட விவரிப்பு செய்யப்பட்டது[4].

பொருளடக்கம்

அறிகுறிகள்

முடக்கு வாதம் முதன்மையாக மூட்டுகளைத் தாக்குகிறது என்றாலும், உடலின் பிற உறுப்புகளிலும் இந்நோய் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. சாதாரணமாகக் காணப்படும் இரத்த சோகையினைத் தவிர்த்து மூட்டுக்கு வெளியில் ஏற்படும் விளைவுகள் மருத்துவரீதியாக சுமார் 15–25 சதவிகித முடக்குவாத நோயாளிகளில் காணப்படுகின்றன[5]. இத்தகுப் உடல்நலக் கோளாறுகள் நேரடியாக முடக்குவாத நோய்நிகழ்முறையினால் ஏற்படுகிறதா அல்லது பொதுவாக இந்நோய் சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படுகிறதா என்பது உறுதியாகக் கண்டறிவது கடினமாக உள்ளது. உதாரணமாக, மீத்தோடிரெக்சேட்டு உபயோகிப்பதால் விளையும் நுரையீரல் இழைமத்தடிப்பு (Pulmonary fibrosis), கார்டிகோஸ்டீராய்டுகளினால் ஏற்படும் எலும்புப்புரை (osteoporosis) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மூட்டுகள்

முடக்குவாதம் எப்படி மூட்டுகளைத் தாக்குகிறது என்பதற்கான வரைபடம்
மூட்டுகளில் ஏற்படும் வாதமான மூட்டுறை அழற்சி, மூட்டுகள் மற்றும் தசைநாண் உறைகளைச் சுற்றியுள்ள மூட்டுச்சவ்வு அழற்சி அடைவதைக் குறிக்கிறது. இத்தகு அழற்சியால் மிருதுவாக, வெதுவெதுப்பாக புடைத்துக் காணப்படும் மூட்டுகள் விறைப்புத்தன்மையை அடைவதால் அசைவுகள் கட்டுபடுத்தப்படுகின்றன. நாளடைவில், முடக்குவாதமானது பல மூட்டுகளையும் தாக்குகிறது [பல்-மூட்டழற்சி (polyarthritis)]. பொதுவாக, கை, கால்கள், கழுத்துப்பகுதி முதுகுத்தண்டில் உள்ள சிறிய மூட்டுகள் பாதிக்கப்பட்டாலும் தோள், முட்டிகளிலுள்ள பெரிய மூட்டுகளும் வாதத்தால் பாதிக்கப்படலாம். மூட்டுறை அழற்சியினால் மூட்டுத்திசுக்கள் தளர்ந்து, அசைவது பாதிக்கப்பட்டு, மூட்டுகளின் மேற்பரப்பு சிதைவடைந்து, உருகுலைந்து, செயலிழந்து போகின்றன[1].
முடக்குவாதமானது குறிப்பாக அதிகாலையில் நடக்கும்போதோ அல்லது நீண்டநேரம் செயல்படாமல் இருக்கும்போதோ பாதிக்கப்பட்ட மூட்டுகள் அழற்சி அறிகுறிகளுடன் வீங்கியும், வெதுவெதுப்பாகவும், வலியுடனும், விறைத்தும் பொதுவாக காணப்படுகிறது. அதிகாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகமான விறைப்புத்தன்மையுடன் மூட்டுகள் காணப்படுவது மூட்டுவாத நோய் உள்ளவர்களில் அடிக்கடிக் காணப்படும் ஒரு முதன்மையான அறிகுறியாகும். இத்தகு அறிகுறிகள், முடக்குவாதத்தை மூட்டுகளில் ஏற்படும் அழற்சியல்லாத பிற பிரச்சனைகளிலிருந்து [உதாரணமாக, முதுமை மூட்டழற்சி (osteoarthritis) அல்லது தேய்மான சேதார அழற்சி] வேறுபடுத்தியறிய உதவுகிறது. அழற்சியல்லாத பிற பிரச்சனைகளினால் உருவாகும் வாதத்தில் அழற்சி அறிகுறிகளும், அதிகாலை விறைப்பும் குறைவாகவேக் காணப்படுகிறது. இதில், விறைப்புத்தன்மை ஒருமணி நேரத்திற்கும் குறைவாக உள்ளது. மேலும், இத்தகு சூழல்களில், அசைவதால் ஏற்படும் வலியானது இயக்கத்தால் உண்டானதாகும்[6]. முடக்குவாதத்தில் மூட்டுகள் அடிக்கடி சமச்சீராகப் பாதிப்படைகிறது (இது வரையறுக்கப்பட்டதில்லை) என்றாலும், ஆரம்பக் காலகட்டங்களில் சமசீரற்றதாக இந்நோய் காணப்படலாம்.
நோயின் தீவிரம் பரவும்போது, அழற்சி வினைகள் தசைநாண் தளர்வடைவதற்கும், மூட்டு மேற்பரப்பு சிதைந்து சீர்குலைவதற்கும் காரணமாவதால், இயங்குவதற்குத் (அசைவதற்கு) தடைகள் ஏற்பட்டு ஊனத்திற்கு வழிவகுக்கிறது. எவ்வகையான மூட்டுகள் அதிகமாகப் பாதிப்படைகிறது என்பதைப் பொறுத்து, விரல்களில் ஏற்படும் உருகுலைவுகள் எந்தவகையாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட உருகுலைவுகளின் (முன்கைப் பேரெலும்பு பிறழ்வு (ulnar deviation), அன்னத்தின் கழுத்து போன்ற வளைவு (swan neck deformity), ஆங்கில எழுத்து "இசட்" வடிவ பெருவிரல்) பெயர்களை மருத்துவ மாணவர்கள் கற்றறிந்தாலும், முதுமை மூட்டழற்சியிலும் இத்தகு மூட்டுச் சிதைவுகள் ஏற்படுவதால் முடக்குவாதத்தைக் குறிப்பாகக் கண்டறிவதற்கு இவை பயன்படுவதில்லை. விரல் இடைமூட்டு (interphalangeal joint) மிகுநீட்சி அடைவதாலும், அங்கை முன்னெலும்பு மூட்டு (metacarpophalangeal joint) நிரந்தரமான வளைவினைப் பெறுவதாலும், மூட்டு பிசகுவதாலும், "இசட்" உருகுலைவு ("Z-deformity") அல்லது "இசட்" வடிவ பெருவிரல் ("Z-thumb") ஏற்படுகிறது.

தோல்

முடக்குவாத முடிச்சுகள் (rheumatoid nodule) முடக்குவாதத்தின் ஒரு குறிப்பிடத்தக்கத் தோற்றமாகக் கருதப்படுகிறது. இது ஒரு வகையான அழற்சி வினைகளால் உருவானதாகும். இத்தகு முடிச்சுகளை சிதைவுறும் குறுமணிப்புற்று (necrotizing granuloma) என நோயியல் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவை உருவாகுவதற்கான ஆரம்பக்கட்ட நோய்நிகழ்வுகள் தெரியாவிட்டாலும், இதைப் போன்ற வடிவத் தோற்றங்கள் மூட்டுறை அழற்சியிலும் இருப்பதால் இவை இரண்டிலும் நோய்நிகழ்வுகள் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இம்முடிச்சுகள் நாரியச்சிதைவு (fibrinoid necrosis) மையத்தைக் கொண்டுள்ளது. இம்மையங்கள் பிளவடைந்திருக்கலாம். இவை பாதிக்கப்பட்ட மூட்டுறை வெளியிலும், அதைச்சுற்றியும் காணப்படும் நாரியல்பொருள் செறிந்த (fibrin-rich) சிதைவுப் பொருள்களுடன் ஒத்துக் காணப்படுகிறது. மூட்டுச்சவ்விலுள்ள உட்படலத்தைப் போன்ற, பெருவிழுங்கிகள், நாரியற்செல்களைக் கொண்ட அடுக்கும், மூட்டுறை அழற்சியில் காணப்படும் உட்படலத்தின் கீழ்பகுதி போன்ற, வெள்ளையணுக்கள், பிளாசுமா செல்களைக் கொண்ட இணைப்பிழைய அடுக்கும் திசு நசிவுப் பகுதிகளைச் சுற்றி உள்ளன. குறிப்பிடத்தக்க முடக்குவாத முடிச்சுகள் சில மில்லிமீட்டரிலிருந்து சில சென்டிமீட்டர் அளவு விட்டத்தினைக் கொண்டிருக்கும். சாதாரணமாக முடக்குவாத முடிச்சுகள், எலும்பு புடைப்புகளான முழங்கைக்கணு (olecranon), குதிக்கால் மேடு (calcaneal tuberosity), அங்கை முன்னெலும்பு மூட்டு, தொடர்மீள் இயக்க அயர்ச்சிக்குட்படும் பிற பகுதிகளில் காணப்படுகிறது. இத்தகு முடிச்சுகள் முடக்குவாதக்காரணி (rheumatoid factor) மிகைச்செறிவுடனும், கடுமையான சிதைக்கும் முடக்குவாதத்துடனும் (severe erosive arthritis) தொடர்புள்ளவையாக உள்ளன. மிக அரிதாக உள் உறுப்புகளிலோ, உடலின் பிற பகுதிகளில் பரவலாகவோ இவை உருவாகலாம். முடக்குவாதத்தில் நாள அழற்சி பல வடிவங்களில் [தீங்கற்ற வடிவங்களாக நகங்களைச் சுற்றி நுண்ணிய இரத்தநசிவுகளாகவும் (microinfarcts), கடுமையான வடிவங்களாக தோல் இரத்தக் கட்டுத்திட்டு வலைய (livedo reticularis)] அழற்சியாகவும் காணப்படுகிறது.
பிற அரிதான தோல் அறிகுறிகள்
  • தோல் சீழ்நோய் (Pyoderma gangrenosum)
  • கொழுப்பிழைய அழற்சி (Panniculitis)
  • கண்டு செந்தடிப்பு (erythema nodosum)
  • அங்கையச் செந்தடிப்பு (palmar erythema)
  • விரலிலுள்ள தோல் நலிவு
  • மருந்துகளினால் ஏற்படும் விளைவுகள்
  • பரவலான மெலிவு (மரஉரி தாள் போன்ற தோல்), தோல் உடையுமை
  • சுவீட்டின் நோய்க் குறித்தொகுப்பு (Sweet's syndrome)

நுரையீரல்

முடக்குவாதத்தில் நுரையீரல் இழைமப் பெருக்கம் ஏற்படுவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாகும். இது, மீத்தோடிரெக்சேட்டு, லெஃப்லுனோமைடு போன்ற வாதநோய் எதிர்ப்பு மருந்துகளின் சிகிச்சையின் விளைவாக மிக அரிதாக நிகழலாம். முடக்குவாத நோயாளிகள், கூடுதலாக நிலக்கரிப் புழுதிக்கு ஆட்படும்போது நுரையீரல் முடிச்சுகள் காணப்படுவதாக காப்லான் நோய்க்குறித் தொகுப்பு விவரிக்கிறது. புடைச்சவ்வு ஊறணியும் (Pleural effusion) முடக்குவாதத்துடன் தொடர்புடையதாக உள்ளது. முடக்குவாத நுரையீரல் நோய் இவ்வாத நோயின் பிற சிக்கல்களுள் ஒன்றாகும். நான்கில் ஒரு பங்கு அமெரிக்க வாதநோயாளிகளில் முடக்குவாத நுரையீரல் நோய் உருவாவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[7].

சிறுநீரகங்கள்

நாள்பட்ட அழற்சியின் காரணமாக சிறுநீரக மாவேற்றம் (Renal amyloidosis) நிகழ்கிறது[8]. குருதிக்குழாய் சிக்கலாலோ (vasculopathy), சிறுநீரகச் செல்கள் (mesangial cells) ஊடுருவுவதாலோ வாதநோயின்போது சிறுநீரக வடிமுடிச்சுகள் (kidney glomeruli) பாதிக்கப்படலாம் என்றாலும், இவை விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை[9]). பெனிசிலமைன், தங்க உப்புகள் ஆகியவற்றை சிகிச்சைக்கு உபயோகப்படுத்துவது சவ்வுச்சிறுநீரகவாதம் (membranous nephropathy) உண்டாவதற்கான காரணமாகிறது.

இதயம் மற்றும் குருதிக்குழல்கள்

முடக்குவாத நோயாளிகள் தமனித் தடிப்பினால் (atherosclerosis) அதிகம் பாதிப்படுவதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் (பாரிசவாதம்) ஆகிய நோய்களுக்கான இடரினையும் அதிக அளவு பெறுகிறார்கள்[10][11]. பின்வரும் சிக்கல்களும் நிகழக்கூடும்: இதயஉறையழற்சி (pericarditis), அகவிதயவழல் (endocarditis), இடது இதயக்கீழறை செயலிழப்பு, இதழ் அழற்சி (valvulitis), இழைமப் பெருக்கம்[12]. என்றாலும், பல முடக்குவாத நோயாளிகள் இதயவலி, மாரடைப்பின்போது ஏற்படும் நெஞ்சுவலியைப் போன்ற வலியினை உணருவதில்லை. இதக்குழலிய நோயைக் குறைக்க முடக்குவாத நோயாளிகளில் அழற்சியை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. தேவையான உடற்பயிற்சி, மருந்துகளின் மூலமாக இதக்குழலிய நோய்கான பிற இடர்களான இரத்தக் கொழுமியங்கள், இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைப்பது கட்டாயமாகிறது. மருத்துவர்கள் முடக்குவாத நோயாளிகளுக்கு அழற்சிக்கான எதிர் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது இதக்குழலிய நோயைக் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. இரையக குடலியத் தாக்கங்கள் பொறுத்துக் கொள்ளும் அளவில் இருந்தால், குறைந்த அளவு ஆஸ்பிரின் மருந்தை வழக்கமாகப் பரிந்துரைப்பதை மருத்துவர்கள் கவனித்தில் கொள்ளலாம்[12].

No comments:

Post a Comment