Thursday, July 18, 2013

அரிய உலோகம்

அரிய உலோகம் என்பது, மிகவும் அரிதாகக் கிடைப்பதும், இயற்கையில் காணப்படுவதும், உயர்ந்த பொருளியற் பெறுமதி கொண்டதுமான ஒரு உலோக வேதியியல் தனிமம். இவை பொதுவாகக் கம்பியாக நீட்டத்தக்க தன்மையும், உயர் மினுக்கமும் கொண்டவை. முன்னர் அரிய உலோகங்கள் நாணயமாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இவை முதலீடாகவும், தொழிற்றுறைப் பண்டங்களாகவுமே பயன்படுகின்றன. பொன், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் என்பன அரிய உலோக வகையைச் சேர்ந்தவை.
மிகவும் அறியப்பட்ட அரிய உலோகங்கள், நாணய உலோகங்களான பொன்னும் வெள்ளியும் ஆகும். தொழிற்றுறையிலும் இவற்றுக்குப் பயன்பாடு இருந்தபோதும், கலைப்பொருட்கள், நகை, நாணயங்கள் ஆகியவை தொடர்பிலேயே மக்கள் இவற்றைப் பெரிதும் அறிந்துள்ளனர். பிளாட்டினக் கூட்டத்தைச் சேர்ந்த ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஓசுமியம், இரிடியம், பிளாட்டினம் ஆகியவையும் அரிய உலோகங்களே. இவற்றுள் பிளாட்டினம் மிகப் பரவலான விற்பனைப் பண்டமாக உள்ளது.[1]
சில அரிய உலோகங்கள்
அரிய உலோகங்களுக்கான கேள்வி, அவற்றின் பயன்பாட்டுத் தேவையினால் மட்டுமன்றி, ஒரு முதலீடாகவும், மதிப்பின் நிலைக்களனாகவும் அவை வகிக்கும் பங்கினாலும் தீர்மானிக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே அரிய உலோகங்கள் பொதுவான தொழிற்றுறை உலோகங்களைவிட விலை கூடியனவாக உள்ளன.

பொருளடக்கம்

பாளநிலை அரிய உலோகம் (பாளகம்)

1000 அவுன்சு வெள்ளிக் கட்டி
அரிதாகக் கிடைப்பதனாலேயே உரு உலோகம் அரிய உலோகம் ஆகிறது. மேற்படி உலோகங்களின் புதிய மூலங்களைக் கண்டுபிடிப்பதனாலும், அவற்றை அகழ்வதிலும், பிரித்தெடுப்பதிலும் மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதாலும், அரிய உலோகங்களின் பெறுமதி குறையக்கூடும். அரிய உலோகத் தகுதியானது குறித்த உலோகத்துக்கான உயர்ந்த கோள்வியினாலும், சந்தைப் பெறுமதியினாலும் எற்படக்கூடும். அரிய உலோகங்களைத் தொகையாகக் கையாளும் நிலையில் அவற்றைப் பாளகம் (bullion) எனலாம். இவை பண்டச் சந்தைகளில் வணிகம் செய்யப்படுகின்றன. இவை பின்னர் குற்றிகளாகவும், நாணய வடிவிலும் வார்க்கப்படுகின்றன. பாளகத்தின் மதிப்பை அதன் திணிவையும், தூய்மையையும் வைத்தே முடிவு செய்கின்றனர்.[2]

தூய்மையும் திணிவும்

ஒரு 500 கிராம் வெள்ளிப் பாளகக் குற்றி.
தூய்மையின் அளவு வெளியீடுகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. 99.9% தூய்மையே பொதுவாகக் காணப்படுவது. பெருமளவில் உற்பத்தி செய்யப்படுபவற்றுள் கனேடிய தங்க மேப்பிள் லீஃப் தொடரில் உள்ள காசுகளே ஆகக் கூடிய அளவாக 99.999% தூய்மை கொண்டவை. அகழ்ந்தெடுத்துத் தூய்மையாக்கும் வழிமுறைகளில் முழுமையான தூய்மையை அடைவது அணுகற்கோட்டு அடிப்படையிலேயே (asymptotically) ஆதலால், 100% தூய்மை சாத்தியம் அற்றது. காசுகள் கலப்புலோகத்தின் குறித்த ஒரு நிறையையும், உள்நாட்டுத் தரநிலைக்கேற்ற தூய்மை அளவையும் கொண்டிருந்தன. குறுகெரான்ட் காசுகளே தூய பொன்னின் அடிப்படையில் அளக்கப்பட்ட, தற்காலத்தின் முதல் எடுத்துக்காட்டு. இது 12/11 அவுன்சுகள் நிறை கொண்ட 11/12 தூய பொன்னைக் கொண்டிருக்க வேண்டும். பிரித்தானிய சவரின் போன்ற பாளகக் காசுகள் சிலவற்றில் அவற்றின் தூய்மை அளவோ, அவற்றில் உள்ள தூய பொன்னின் அளவோ குறிக்கப்படுவது இல்லை. ஆனாலும், அவற்றின் உள்ளீடுகள் ஒருமாதிரியாகவே இருக்கும் என்று கொள்ளப்படுகிறது. பல நாணயங்களில் ஒரு பணப் பெறுமானம் குறிக்கப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இரட்டைக் கழுகு இதற்கு எடுத்துக்காட்டு.

காசு அச்சிடல்

ஒரு அவுன்சு வியன்னா பிலார்மோனிக் காசு
பல நாடுகள் அரிய உலோகக் காசுகளை அச்சிடுகின்றன. பெயரளவில் இவற்றைச் சட்டமுறைச் செலவாணியாக வெளியிட்டாலும், இவற்றில் குறிக்கப்படும் பெறுமதி இவற்றின் உண்மையாக பெறுமதியிலும் மிகமிகக் குறைவானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கனடா வெளியிட்ட, ஒரு டிரோய் அவுன்சு (31.1035 கிராம்) நிறை கொண்ட ஒரு பொற்காசின் (கோல்ட் மேப்பிள் லீஃப்) முகப்புப் பெறுமானம் 50 டாலர்கள். ஆனால் இதன் சந்தைப் பெறுமானம் (மே 2011) ஏறத்தாழ 1,500 டாலர்கள்.[3] அரசுகள் அச்சடிக்கும் அரிய உலோகக் காசுகளுக்கு அவற்றின் உலோகப் பெறுமானத்துக்கு மேலாக ஓரளவு நாணயவியல் பெறுமானமும், அதன் தூய்மைக்கான சான்றுப் பெறுமதியும் இருப்பது உண்டு.
உலகின் மிகப்பெரிய அரிய உலோகக் காசுகளில் ஒன்று ஆசுத்திரேலியாவில் அச்சிடப்பட்ட 10,000 டாலர் ஆசுத்திரேலிய பொற்கட்டிக் (Australian Gold Nugget) காசு ஆகும். இது ஒரு கிலோகிராம் நிறை கொண்ட 99.9% தூய்மை கொண்ட பொன்னால் ஆனது. குறைந்த எண்ணிக்கையிலான இதைவிடப் பெரிய காசுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கையாள்வது நடைமுறைச் சாத்தியமாக இல்லாததால் இவற்றைப் பெருமளவில் அச்சிடுவது இல்லை. 260 டிரோய் அவுன்சுக்கும் (8 கிகி) கூடுதலான நிறை கொண்ட பொற்காசுகளை சீனா வெளியிட்டது. 20க்கும் குறைவான காசுகளே அச்சிடப்பட்டன. 2004ல், 100,000 யூரோ முகப்புப் பெறுமானம் கொண்ட பொற்காசுகளை (வியன்னா பிலார்மோனிக் காசு - Vienna Philharmonic Coin) ஆசுத்திரியா வெளியிட்டது. இது 31 கிலோகிராம் பொன்னால் ஆனது. 99.999% தூய்மையான ஒரு அவுன்சு கனேடிய கோல்ட் மேப்பிள் லீஃப் காசுகளைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு விளம்பர உத்தியாக 100 கிலோகிராம் 99.999% தூய பொன்னால் ஆன காசு ஒன்றை 2007 ஆம் ஆண்டில் கனடா வெளியிட்டது. இதன் முகப்புப் பெறுமானம் 1 மில்லியன் டாலர்கள். தற்போது கேட்பவர்களுக்கு இது அச்சிட்டுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு, இதில் அடங்கிய பொன்னின் சந்தை விலைக்கும் கணிசமான அளவு கூடுதலாக விலை குறிக்கப்படுகிறது.[4]

பொருளியல் பயன்பாடு

1 கிகி தங்கக் கட்டி
பொன், வெள்ளி ஆகிய உலோகங்களும், சில வேளைகளில் பிற அரிய உலோகங்களும், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. விலை ஒப்பீட்டளவில் கட்டுப்படியாகக் கூடியதாக இருப்பதாலும், சந்தையைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படும் பொன், பிளாட்டினம் ஆகியவற்றாலான காசுகளைப் போலன்றி வெள்ளிக்காசுகள் சேகரிப்புப் பொருள்களாகக் கருதப்பட்டுச் சந்தை விலையிலும் கூடிய பெறுமதி உடையனவாக மதிக்கப்படுவதாலும், வெள்ளிக் காசுகள், சேகரிப்பாளரால் கூடுதலாக விரும்பப்படுகிறது.

அலுமினியம்

ஒரு காலத்தில் அரிய உலோகமாக இருந்து பின்னர் சாதாரண உலோகமானது அலுமினியம். இது, புவியின் மேலோட்டில் மிகப் பொதுவாகக் காணப்படும் தனிமங்களில் ஒன்றாக இருந்த போதிலும், அதன் தாதுப் பொருட்களில் இருந்து அதனைப் பிரித்து எடுப்பது ஒரு காலத்தில் கடினமானதாக இருந்தது. இதனால் கூடிய செலவுடன் பிரித்து எடுக்கப்பட்ட குறைந்த அளவான அலுமினியம், பொன்னிலும் கூடிய பெறுமதி கொண்டதாக இருந்தது. 1855 ஆம் ஆண்டில் பிரான்சில் இடம்பெற்ற பன்னாட்டுக் கண்காட்சியில், பிரான்சின் அரச அணிகளுடன் அலுமினியக் கட்டிகளும் வைக்கப்படிருந்தன. மூன்றாம் நெப்போலியனின் மிக முக்கியமான விருந்தினர் உணவருந்துவதற்கு அலுமினியத்தினால் செய்யப்பட்ட கரண்டி முதலியன கொடுக்கப்பட்ட அதேவேளை, குறைவான முக்கியத்துவம் உடையவர்களுக்கு வெள்ளிக் கரண்டி முதலியன வழங்கப்பட்டன. அத்துடன், வாசிங்டன் நினைவுச்சின்னத்தின் பட்டைக் கூம்பு வடிவ உச்சி 100 அவுன்சு எடை கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்ட காலத்தில், அலுமினியத்தின் விலை வெள்ளியின் விலையை ஒத்திருந்தது. 1886 ஆம் ஆண்டில் அலுமினியத்தைப் பிரித்து எடுப்பதற்கான புதிய முறையைக் கண்டுபிடித்த பின்னர் அலுமினியத்தின் விலை நிரந்தரமாகவே வீழ்ச்சியடைந்துவிட்டது.

No comments:

Post a Comment