Saturday, June 29, 2013

திராட்சை - Grapes

 

திராட்சை, இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினாகிரி, வைன், திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6 தொடக்கம் 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கடும் நீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.

பொருளடக்கம்

  • 1 திராட்சைக் கொடிகள்
  • 2 பரவலும் செய்கையும்
  • 3 மருத்துவ குணங்கள்
  • 4 உலர்ந்த திராட்சை
    • 4.1 பயன்கள்

திராட்சைக் கொடிகள்

வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிபேரா (Vitis vinifera) என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், விட்டிஸ் லபுருஸ்கா (Vitis labrusca), விட்டிஸ் ரிப்பாரியா (Vitis riparia), விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா (Vitis rotundifolia), விட்டிஸ் அமுரென்சிஸ் (Vitis amurensis) போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்

பரவலும் செய்கையும்

லெபனானில் உள்ள ஐத்தா அல் பூக்கர் என்னும் ஊரில் உள்ள ஒரு திராட்சைத் தோட்டம்
திராட்சைக் கொடிகள்
உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.
கீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது.

நாடு ஒதுக்கிய நிலப்பரப்பு
ஸ்பெயின் 11,750 கிமீ²
பிரான்ஸ் 8,640 கிமீ²
இத்தாலி 8,270 கிமீ²
துருக்கி 8,120 கிமீ²
ஐக்கிய அமெரிக்கா 4,150 கிமீ²
ஈரான் 2,860 கிமீ²
ருமேனியா 2,480 கிமீ²
போர்த்துக்கல் 2,160 கிமீ²
ஆர்ஜென்டீனா 2,080 கிமீ²
ஆஸ்திரேலியா 1,642 கிமீ²
லெபனான் 1,122 கிமீ²
வேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது.
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

மருத்துவ குணங்கள்

உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம்.திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி அரை ரூபா எடை வரை உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே இருக்கும்.காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும் தீராத தொல்லைகள் தீரும்.மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவப் பண்டம் திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும். திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.

உலர்ந்த திராட்சை

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

பயன்கள்

  • ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
  • உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
  • இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
  • தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.
  • மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

No comments:

Post a Comment