Saturday, June 29, 2013

சுண்டை - மூலிகை, சமையலிலும் உபயோகப்படும் ஒரு செடியாகும்

 Solanum torvum 2.jpg
சுண்டை (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் உபயோகப்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரமாக வளர்கிறது. சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்பு தன்மை அதிகளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும். சர்க்கரைநோய் போன்றவைகளை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு.
  1. காட்டுச் சுண்டை
  2. நாட்டுச் சுண்டை
காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பற்றதாகவும் காணப்படும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன.
சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையவை. இலைகள் இரத்தக் கசிவினையும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.
சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து என்பன அதிகமாக உள்ளன. உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகு, கறிவேப்பிலை என்பவற்றை ஒன்று சேர்த்து கஷாயம் செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்.

No comments:

Post a Comment