Saturday, June 29, 2013

கோதுமை - Wheat


Wheat close-up.JPG
கோதுமை (டிரிடிகம் இனம்) என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது.[2] 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது.[3]
ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது.[சான்று தேவை] உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும்.[4] உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது.[5] சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது.
மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடியதாய் இருந்தமையும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாயும் இருந்ததால் இதற்குக் காரணங்களாகும். வளப்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கற், குக்கிகள், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்டா, நூடில்ஸ், கோஸ்கோஸ்[6]போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர்,[7] ஏனைய மதுபானங்கள்[8] மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும்.[9]
கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது.[10][11] இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாப்பொருள் மாத்திரமே உண்டு.

பொருளடக்கம்

  • 1 வரலாறு
  • 2 பயிரிடல் நுட்பங்கள்
  • 3 கோதுமையின் போசாக்குத் தகவல்கள்
  • 4 பயிரிடல் முறைமைகள்
  • 5 மேற்கோள்கள்

வரலாறு


ஆர்மீனிய விளைநிலமொன்றில் விளையும் காட்டுக் கோதுமை
கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளப்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின்[12] சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே 40 மை (64 கிமீ) தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது.[13] எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாமெச் சிலர் கருதுகின்றனர்.[14]

பயிரிடல் நுட்பங்கள்


ஐக்கிய அமெரிக்க இடாகோ மாநில விளைநிலமொன்றில் கோதுமை அறுவடை

இந்திய மகாராட்டிர மாநில விளைநிலமொன்றிலுள்ள இளங் கோதுமைப் பயிர்
பயிரிடும் போதான மண் தயார்செய்கை மற்றும் விதைத்தல் நுட்பங்கள் ஆகியன காரணமாகவும், பயிரின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பயிர் சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் உரப்பயன்பாடு என்பன காரணமாகவும், அறுவடை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாகவும் கோதுமை சிறப்பாகப் பயிரிடக்கூடிய பயிராக விளங்குகிறது. குதிரையைப் பயன்படுத்தி உழும் முறை (3000 BCE அளவில்) காரணமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைந்தது. 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விதைக் கலப்பைகளின் உதவியால் பரந்தளவிலான விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனாலும் கோதுமையின் உற்பத்தித் திறன் வளர்ச்சி பெற்றது.
பயிர்ச்சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான உரப்பயன்பாடு ஆகியன காரணமாக ஓரலகுப் பரப்பிலிருந்து அறுவடை செய்யக்கூடிய கோதுமையின் அளவு அதிகரித்தது. சூடடிப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்ற புதிய இயந்திரங்களின் வருகையும், புதிய கோதுமை ரகங்களின் கண்டுபிடிப்பும் கோதுமைப் பயிர்ச்செய்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காக்களில் புதிய விளைநிலங்களில் கோதுமைப் பயிரிடலோடு கோதுமை உற்பத்தியும் விரிவடைந்துள்ளது.

கோதுமையின் போசாக்குத் தகவல்கள்

கோதுமை 24,00,00,000 hectares (. acres) பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இது ஏனைய எந்தப் பயிருக்கான பயிரிடல் பரப்பளவிலும் அதிகமாகும். உலகின் மிக விரும்பப்படும் நிறையுணவுகள் அரிசியும் கோதுமையுமேயாகும். ஏனைய எந்த உணவுப் பொருள்களிலும் பார்க்க அதிக போசணையை கோதுமை மனிதனுக்கு வழங்குகிறது. கோதுமை ஆர்ட்டிக் பகுதிகளிலிருந்து மத்தியகோட்டுப் பகுதிகள் வரையிலும், கடல் மட்டத்து நிலங்கள் முதல் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீ (13 அடி) உயரமுள்ள திபத் மேட்டுநிலங்கள் வரையிலும் பயிரிடக்கூடியதாக உள்ளதால் இது உலகளவில் ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இது தவிர, கோதுமையைக் களஞ்சியப் படுத்தலும், மாவாக்கலும் இலகுவானதாகும். மேலும் இதிலிருந்து உண்ணத்தக்க, சுவையான பல்வேறு உணவுப்பொருட்களையும் ஆக்கமுடியும். பெரும்பாலான நாடுகளில் மாப்பொருளின் முக்கிய ஆதாரமாகக் கோதுமை விளங்குகிறது.[சான்று தேவை]
கோதுமைப் புரதம் மாவடிவில் உள்ளதால் 99%மான மனிதர்களால் இலகுவாகச் சமிபாடடையச் செய்ய முடியும்.[சான்று தேவை] மேலும் கோதுமையில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் கொழுப்பு ஆகியன உள்ளன. கோதுமை உணவுகள் மிகவும் சத்து மிக்கன.[15]
கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன.[4][16][17]

பயிரிடல் முறைமைகள்


கோதுமை அறுவடை செய்யும் பெண், ரைசன் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
இந்திய மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளிலும் வடக்குச் சீனப் பகுதிகளிலும் சிறப்பான நீர்ப்பாசன வசதிகளால் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் உரப்பயன்பாட்டின் வளர்ச்சியும் புதிய கோதுமை வகைகளின் கண்டுபிடிப்பும் எக்டேயரொன்றுக்கான அறுவடை அளவை அதிகமாக்கியுள்ளன. அபிவிருத்தியடந்துவரும் நாடுகளில் இக்காலப் பகுதியில் உரப்பயன்பாட்டின் அளவு 25 மடங்காக அதிகரித்துள்ளது. எனினும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் உரப்பயன்பாடு மற்றும் புதிய வகை விதைகள் என்பவற்றிலும் பார்க்க பயிரிடல் முறைமைகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் நடைபெறும் கோதுமை வேளாண்மையைக் குறிப்பிடலாம். இங்கு மழைவீழ்ச்சி குறைவாயிருந்தாலும், சிறிதளவு நைதரசன் உரப் பயன்பாட்டுடன் வெற்றிகரமான அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. அவரைக் குடும்பத் தாவரங்களைச் 'சுழற்சிமுறை'ப் பயிர்களாகப் பயன்படுத்தியமையே இவ் வெற்றிக்குக் காரணமாகும். மேலும், சென்ற பதிற்றாண்டில், கனோலா வகைத் தாவரத்தை சுழற்சிமுறைப் பயிராகப் பயன்படுத்தியதின் விளைவாக கோதுமை விளைச்சல் 25% அதிகரித்துள்ளது.[18] மழைவீழ்ச்சி குறைந்த இப்பிரதேசங்களில் அறுவடையின் பின் அடிக்கட்டைகளை அகற்றாது விடுவதன் மூலமும் நிலம் பண்படுத்தலைக் குறைப்பதன்மூலமும் நிலத்தடி நீர் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. (மேலும் மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது)[19]
2009ல், மிகச்சிறந்த உற்பத்தியுடைய நாடாக பிரான்சு உள்ளது. இதன் உற்பத்தித் திறன் எக்டேயருக்கு 7.45 மெற்றிக் தொன்னாகும். 2009ல் அதிக கோதுமை உற்பத்தியுடைய நாடுகளாக சீனா (115 மில்லியன் மெற்றிக் தொன்கள்), இந்தியா (81 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ரசியா (62 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ஐக்கிய அமெரிக்கா (60 மில்லியன் மெற்றிக் தொன்கள்) மற்றும் பிரான்சு (38 மில்லியன் மெற்றிக் தொன்கள்) என்பன திகழ்கின்றன.[3]
எனினும், இந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவான அறுவடைக்குப் பின்னான இழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பயிரிடல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப அறிவின்மையேயாகும். இதற்கு மேலதிகமாக, மோசமான வீதியமைப்பு, போதுமான களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, வழங்கல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியின்மை போன்றனவும் காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தியில் 10% பயிர்நிலங்களில் இழக்கப்படுகின்றன. மேலும் 10% மோசமான களஞ்சியப்படுத்தல் மற்றும் வீதியமைப்புக்களினால் வீணாகின்றன. மேலும் சிறுபகுதி சில்லறைச் சந்தைகளில் இழக்கப்படுகின்றது. சிறந்த உட்கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சில்லறை வலையமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் 70இலிருந்து 100 மில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான உணவை இந்தியாவிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது

No comments:

Post a Comment